×

10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடி இளைஞர் உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியது இந்தியா

பாட்செப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில், பாகிஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 105 ரன் விளாசி அசத்தினார். தென் ஆப்ரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் யு-19 அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக ஹைதர் அலி, முகமது ஹுரைரா இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஹுரைரா 4 ரன் எடுத்து சுஷாந்த் பந்துவீச்சில் சக்சேனா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த பஹத் முனிர் டக் அவுட்டாகி வெளியேற, பாகிஸ்தான் 8.5 ஓவரில் 34 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ஹைதர் அலி - கேப்டன் ரோகைல் நசீர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 62 ரன் சேர்த்தது. அரை சதம் அடித்த ஹைதர் அலி 56 ரன் (77 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஜெய்ஸ்வால் பந்துவீச்சில் ரவி பிஷ்னோய் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். குவாசிம் அக்ரம் 9 ரன் எடுத்து ரன் அவுட்டானார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் போராடிய ரோகைல் நசீர் அரை சதம் அடித்தார். அதிரடியாக விளையாடிய முகமது ஹாரிஸ் 21 ரன் எடுத்து (15 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) அங்கோலேகர் பந்துவீச்சில் சக்சேனாவின் அற்புதமான கேட்ச்சில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அடுத்து வந்த இர்பான் கான் 3, அப்பாஸ் அப்ரிடி 2 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ரோகைல் 62 ரன் (102 பந்து, 6 பவுண்டரி) எடுத்து சுஷாந்த் பந்துவீச்சில் திலக் வர்மா வசம் பிடிபட்டார். தாஹிர் உசேன் 2 ரன், ஆமிர் அலி 1 ரன்னில் வெளியேற, பாகிஸ்தான் யு-19 அணி 43.1 ஓவரிலேயே 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆமிர் கான் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா யு-19 பந்துவீச்சில் சுஷாந்த் மிஸ்ரா 3, கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் தலா 2, அங்கோலேகர், ஜெய்ஸ்வால் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா யு-19 அணி களமிறங்கியது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா இருவரும் துரத்தலை தொடங்கினர். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இருவரும் பின்னர் அதிரடியில் இறங்க இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. குறிப்பாக, ஜெய்ஸ்வால் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் விழி பிதுங்கினர். வெற்றிக்கு 3 ரன், சதத்துக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில்... இமாலய சிக்சர் விளாசிய ஜெய்ஸ்வால் இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இந்தியா 35.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 176 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 105 ரன் (113 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), சக்சேனா 59 ரன்னுடன் (99 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா யு-19 அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளிடையே நாளை நடைபெறும் 2வது அரை இறுதியில் வெற்றி பெறும் அணி, 9ம் தேதி நடக்க உள்ள பைனலில் 4 முறை சாம்பியனான இந்தியாவை எதிர்கொள்ளும்.


Tags : India ,Pakistan Youth World Cup ,final , Pakistan, World Cup, India
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...